போர்ட் ஆஃப் ஸ்பெயின்:மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளை விளையாட இந்தியா அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டிரினிடாட் தீவுகளின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நேற்று (ஜூலை 24) நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. மே.இ. தீவுகள் அணியில் குடகேஷ் மோட்டிக்கு பதிலாக ஹைடன் வால்ஷ் ஜூனியருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆவேஷ் கான் விளையாடினார். ஆவேஷ் கானின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் 115 ரன்களையும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 ரன்களையும் குவித்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், தீபக் ஹூடா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.