பெங்களூரு: இலங்கை அணி, இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 12) தொடங்கியுள்ளது.
அணியில் அக்சர்
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
முன்னதாக, இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி தரப்பில் காயத்தால் அவதிப்படும் நிசங்கா, லஹிரு குமாரா ஆகியோருக்கு பதிலாக குஷால் மெண்டிஸ், பிரவின் ஜெயவிக்ரமா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கைக்கொடுத்த ஸ்ரேயஸ்
இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் அரைசதம் கடந்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 59.1 ஓவர்கள் முடிவில் இந்தியா 252 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 92, ரிஷப் பந்த் 39, ஹனுமா விஹாரி 31 ரன்களை குவித்தனர். இலங்கை பந்துவீச்சில் எம்புல்தெனியா, ஜெயவிக்கிரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியும் விக்கெட்டுகளை வாரி வழங்கின. மெண்டிஸ், திரிமண்ணே ஆகியோரை பும்ரா வெளியேற்றி அசத்தினார். அடுத்து வந்த கருணாரத்னே, தனஞ்செயா ஆகியோரை முகமது ஷமியும், அசலாங்காவை அக்சர் படேலும் விக்கெட் எடுத்தனர்.