தர்மசாலா:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில் நேற்று(பிப்.24) லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது.
20 ஓவர்கள் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டங்களில் தடுமாறிய இஷான் கிஷன், இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 56 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா 44 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள் என்று வலுவான ஓப்பனிங் இந்திய அணியின் கைவசம் உள்ளது.
இதற்கு மாறாக இலங்கை அணி முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டத்தை தொடங்கியது. எவ்வளவு போராடியும் இலங்கை அணி வீரர்களால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனிடையே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், மேற்கிந்திய தீவுகள் அணி போலவே இலங்கை அணியும் வைட் வாஷ் செய்யப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் இலங்கை அணி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே நாளை தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளும் முழு மூச்சில் ஆட்டத்தை வெளிபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.