தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்குமா ரோகித் தலைமையிலான இந்திய அணி..? - தென் ஆப்பிரிக்கா அணி

IND vs SA Test Series: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்க மண்ணில் தொடரை வென்று சாதனை படைக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ind vs sa 1st test rohits men gear up to end 31 year wait for series win
ரோகித் சர்மா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 8:44 PM IST

Updated : Dec 25, 2023, 9:13 PM IST

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைப்பார்.

ரோகித் சர்மாவிற்கு முன்னதாக அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்கள் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இந்திய அணியை வழிநடத்தி தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களில் எம்.எஸ்.தோனியால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடிந்திருந்தது.

இந்நிலையில், நாளை தொடங்கும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ரோகித் சர்மா சாதனை படைப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடக்க உள்ளது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "இது எங்களுக்கு முக்கியமான தொடர். இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. கடந்த இரண்டு முறையும் வெற்றிக்கு மிக நெருக்கமாகச் சென்றோம்.

நாங்கள் சிறப்பாகச் செயல்பட, இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. தற்போது, நாங்கள் வென்றால் அது உலகக் கோப்பை தோல்விக்கு ஈடாகுமா எனத் தெரியவில்லை.

உலகக் கோப்பையில் நாங்கள் எங்களின் திறனை வெளிக்காட்டிச் சிறப்பாகவே ஆடினோம். இருப்பினும், இறுதிப் போட்டியில் சில விஷயங்களைச் செய்யத் தவறினோம். அது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆக வேண்டும்.

இந்த தொடரில், முகமது ஷமி இல்லாதது குறைதான். சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர் அணியைக் கட்டுப்படுத்தும் வியூகத்தை வகுத்துச் செயல்பட வேண்டும். எப்போதுமே, இங்கு பேட்டிங் செய்வது சிரமமானதாகத் தான் இருக்கும். அதனால், புதிதாக இங்குக் களம் காண்பவர்கள் கொஞ்சம் சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அவரின் எதிர்காலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என் எதிர் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திச் சிறப்பாக ஆடி தயாராக இருக்கிறேன். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரிகிறது. அதற்கான பதில் விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:அர்ஜுனா விருதுக்குத் தேர்வான லான் பவுல்ஸ் வீராங்கனை..! யார் இந்த பிங்கி சிங்..?

Last Updated : Dec 25, 2023, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details