ஹைதராபாத்:நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் முஜீப் உர் ரஹ்மான். நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், ஆப்கானிஸ்தான் அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் 179 விக்கெட்டுகள், முகமது நபி 160 மற்றும் தவ்லத் சத்ரான் 115 விக்கெட்டுகள் எடுத்து இருந்தனர். அந்த வரிசையில் தற்போது நான்காவதாக இணைந்துள்ளார் முஜீப் உர் ரஹ்மான்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 34 லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது மட்டும் மல்லாமல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், நூர் அகமது, ரஷித் கான் ஆகியோரை கொண்டுள்ள ஆப்கான் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங்கிலும் தாங்கள் வலுவானவர்கள் என நிரூபித்து வருகின்றனர். இந்த தொடரில் 3வது முறையாகத் தொடர்ந்து சேஸிங்கில் வெற்றி பெற்றுள்ளனர்.
லக்னோவில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியில் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும் அரையிறுதி எதிர்பார்ப்பை ஆப்கான் தக்க வைத்துள்ளது. அடுத்த வரும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 1ல் வெற்றி பெற்றால் கூட பிற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்து ஆப்கான் அரையிறுக்க்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்! மாற்று வீரர் யார் தெரியுமா?