சென்னை: ஐசிசி உலக கோப்பை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை 11வது லீக் ஆட்டமாக நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரையிலான உலக கோப்பை போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த 5 போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
மே 17, 1999: நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்
1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் தான் வங்கதேசம் அணி முதல் முறையாக அடியெடுத்து வைக்கிறது. அந்த ஆண்டில் அவர்கள் முதல் போட்டியாக நியூசிலாந்து அணியை எதிர்கொண்டனர். அதில் வங்கதேசம் அணியே முதலில் பேட்டிங் செய்தது. அந்த போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் எவருமே பெரிதாக சோபிக்கவில்லை.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் அதிக்கமே ஆட்டம் தொடக்கம் முதல் இருந்தது. ஜெஃப் அலோட், கிறிஸ் கெய்ர்ன்ஸ், கவின் லார்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அந்த அணியை வெறும் 116 ரன்கள் சுருட்டினர். அதன் பின் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 33 ஓவர்களில் அந்த இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.
பிப்ரவரி 26, 2003: எளிதில் கிடைத்த வெற்றி
2003 உலக கோப்பை வங்கதேசம் அணிக்கு மோசமான ஒன்றாகவே அமைந்தது என குறிப்பிடலாம். ஏன்னென்றால் அந்த தொடரில் அவர்கள் விளையாடிய 6 போட்டிகளிலுமே தோல்வியை தழுவினார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்கள் அந்த தொடரின் 5வது போட்டியை எதிர்கொண்டனர். ஏற்கனவே கடந்த 4 போட்டிகளில் தோல்விடைந்த அவர்கள் இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என களம் இறங்கினார். ஆனால் அந்த போட்டியிலும் எளிதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தொடக்க வீரரான முகம்மது அஷ்ரப் அரைசதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சோர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர்களால் 198 ரன்களையே எட்ட முடிந்தது. சரி பந்து வீச்சிலாவது கட்டுப்படுத்தி வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை குழிதோண்டி புதைத்தனர், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான கிரேக் மெக்மில்லன் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங். முதல் விக்கெட்டை இழப்பத்ற்கு அவர்கள் எடுத்த தூரம் 71 ரன்கள். ஃப்ளெமிங் 32 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் நிலைத்து நின்று 75 ரன்கள் எடுத்தார் மெக்மில்லன். 3 விக்கெட்களை நியூசிலாந்து அணி இழந்தாலும், 33 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்ற பெற்றது.
ஏப்ரல் 02, 2007, ஃப்ளெமிங் சதத்தால் வீழ்ந்த வங்காளம்
இம்முறை குரூப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி குரூப் 8க்கு முன்னேறியது வங்கதேசம் அணி. அதில் உலக கோப்பை போட்டிகளில் முன்றாவது முறையாக நியூசிலாந்து அணியை சந்தித்தது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, உலக கோப்பை தொடர்களில் வங்கதேசத்துடன் 3-0 என்ற கணக்கில் தொடர்ந்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த போட்டியில் 10 ஓவர்களை வீசிய நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் 2 விக்கெட்களை கைப்பற்றி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருப்பார். அதனைத் தொடர்ந்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி ஆட்டத்தின் தொடக்கமே பீட்டர் ஃபுல்டன் விக்கெட்டை இழந்தாலும், அந்த போட்டியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றனர். ஸ்டீபன் ஃப்ளெமிங் 102 ரன்களுடனும், ஹமிஷ் மார்ஷல் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மார்ச் 13, 2015: குப்டில் - ராஸ் டெய்லர் பார்ட்னர்ஷிப்
மெக்கலாம் தலைமையிலான நியூசிலாந்து அணி வங்கதேசதிற்கு எதிரான அந்த போட்டியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 288 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர்கள் பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும், மஹ்முதுல்லாஹ்-வின் சதம் 288 ரன்களை எட்ட உதவியது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய அணிக்கு வங்கதேசத்தின் பந்து வீச்சாளர் நெருகடியை கொடுத்தனர். ஆனால் மார்ட்டின் குப்டில் மற்றும் ராஸ் டெய்லரின பார்ட்னர்ஷிப்பால் அந்த போட்டியை அவர்களால் வெல்ல முடிந்தது. அந்த போட்டியில் தொடக்க வீரர் குப்டில் 105 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 05, 2019: போராடி தோற்ற வங்கதேசம்
2019 உலக கோப்பையில் நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற உற்சாகத்துடன் வங்கதேச அணியை எதிர்கொண்டனர். ஆனால் இம்முறை அவ்வளவு எளிதாக அந்த அணியை வெல்ல முடியவில்லை. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலக்கு சிறியது என்று நினைதவர்களுக்கு ஒரு காட்டு காட்டியது வங்கதேசம் அணி. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் குப்டில் 25, கொலின் மன்றோ 24 ரன்களில் வெளியேறினர். அதன் பின் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் - ராஸ் டெயிலடின் பார்ட்னர்ஷிபே அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து வங்கதேசத்திற்கு எதிராக உலக கோப்பையில் 5வது வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க:BAN VS NZ: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேன் வில்லியம்சன்!