புனே:13வது ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று (நவ. 1) நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் களம் காணுகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கடந்த மாதம் 13ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் விரல் பகுதியில் அவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து நடைப்பெற்ற 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை டாம் லாதம் வழிநடத்தினார். ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிக்கு எதிரான போட்டிகளில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர் விளையடமாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது x வலைதளத்தில் கூறியுள்ளதாவது, "வில்லியம்சன் இரண்டு நாட்களாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அடுத்து வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் டாம் லாதமே நியூசிலாந்து அணியை வழி நடத்துவர் எனக் கூறப்படுகிறது.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பில் தொடர இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க:South Africa Vs New Zealand : தென் ஆப்பிரிக்கா தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா நியூசிலாந்து!