அகமதாபாத்:13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி - பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை இன்று (நவ.19) எதிர்கொள்கிறது.
அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து, உலகமே உற்று நோக்கும் வைகையில் பல்வேறு வகையான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்பாடுகள்:இறுதிப் போட்டி தொடங்கப்படுவதற்கு முன்னதாக பகல் 12 மணிக்கு சூரிய கிரண் குழுவினர் வான் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர். இதில் சுமார் 9 விமானங்கள் 10 நிமிடங்களுக்கு மைதானத்தின் மேலே உள்ள வான்பகுதியில் சாகசம் நிகழ்த்த உள்ளது. 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக விமானப்படை சாகசம் நடைபெறவுள்ளது.
போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும், முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களைக் கொண்டு பிரமாண்டமான இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பின்னர், 2வது முதல் இன்னிங்சின் இரண்டாவது குடிநீர் இடைவேளையின்போது, 90 விநாடிகளுக்கு கண்களைக் கவரும் வகையில் உலகப் புகழ் பெற்ற லேசர் ஷோ நடத்தப்படவுள்ளது. மேலும், உலகக் கோப்பையை சாம்பியன் அணி கையில் ஏந்தும்போது, 1,200 டிரோன்களைக் கொண்டு வானில் உலகக் கோப்பையை வன்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.
பிரபலங்கள் வருகை:போட்டி நடைபெறுவதற்கு முன்னரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம். 1.30 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானம், இன்று ரசிகர்களால் நிரம்பி வழியவுள்ளது. மேலும், இப்போட்டியினை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ், அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் கண்டுகளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால மைதானத்தைச் சுற்றியும் 6,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என கூறப்படுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியைக் காண ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரபலங்களும் குஜராத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க:20 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா.. வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா?