பெங்களூரு: ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தனது அதிரடியான பந்து வீச்சால் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) விக்கெட்டை வீழ்த்தி விராட் கோலி சாதனை புரிந்தார்.
இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் மட்டுமே விராட் கோலிக்கு வழங்கப்பட்ட நிலையில், 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 25வது ஓவரில் நெதர்லாந்து அணியின் கேப்டன் விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு பந்து வீச 5வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டதும், அவர் விக்கெட் வீழ்த்தியதையும் ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அந்த ஆட்டத்தில் விராட் கோலி அதிரடியாக பந்து வீசி முதன்முறையாக எதிர் அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.