கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் விராட் கோலி இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் சதமடித்துள்ளார். இந்த சதம் மூலம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த (49) சாதனையைச் சமன் செய்துள்ளார். இன்று விராட் கோலியின் 35வது பிறந்தநாள் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
விராட் கோலி தனது 49வது ஒருநாள் சதத்தை 277 இன்னிங்ஸில் அடித்துள்ளார். அதே வேளையில் சச்சின் டெண்டுல்கர் தனது 49வது சதத்தை 463வது இன்னிங்ஸில் அடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் ரோகித் சர்மா 31 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். விராட் கோலி இன்று மேலும் பல சாதனைகளை முறியடித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இன்று சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி 1573 ரன்களுடன் 3வது இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் 2278 ரன்களுடன் உள்ளார். மேலும் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (6000) எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் (6976) உள்ளார்.