மும்பை:ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிச் சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (நவ.15) நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 48.5 ஓவர்கள் முடிவில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியின் சார்பாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 105 ரன்களையும் குவித்தனர்.
ஆனால், ஓப்பனராக களமிறங்கி சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்து இருந்தபோது தசைபிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதனால் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதை சுப்மன் கில் தவறவிட்டுவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து சுப்மன் கில் பேசுகையில் “ஒவ்வொரு முறையும் விராட் கோலி களமிறங்கும்போது பல சாதனைகளை படைத்து வருகிறார்.
அவரின் திறமைகளைக் காட்டிலும் ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்து வரும்போது எங்களுக்கும் அது ஊக்கமளிக்கின்றது.