மும்பை:ஐசிசி உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிச் சுற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (நவ.15) நடைபெற்றது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 105 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 48.5 ஓவர்கள் முடிவில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரில் மிட்செல் 134 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்களையும் குவித்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்து 7 விக்கெட்டுகளை வீழ்த்து அசத்தினார்.
கேப்டன் ரோகித் சர்மா:இதனையடுத்து வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “நான் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைய போட்டிகள் விளையாடியுள்ளேன். ஆனாலும், இந்த போட்டியில் என்னால் அமைதியான மனநிலையில் இருக்க முடியவில்லை. ஏனெனில், இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருக்கும் என்பது தெரியும்.
அதனால் எந்த இடத்திலும் எங்களால் ரிலாக்ஸாக இருக்க முடியாது. ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணி வீரர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். ஆனாலும், இது போன்ற ஆட்டங்களில் சில நேரம், இது போன்ற தவறு நடக்கக் கூடிய ஒன்றுதான். நியூசிலாந்து அணி சார்பாக மிட்சல் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர்.
இருப்பினும், இறுதியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் ஷமி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். பேட்டிங்கில் ஐயர் இந்த தொடர் முழுவதும் நல்ல ஃபார்மில் ஆடி வருகிறார். அதேபோல் தொடக்க வீரரான கில் மற்றும் கோலி ஆகியோரும், தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். நிச்சயம் இந்த வெற்றியை அப்படியே நாங்கள் தொடர்வோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:செமி பைனலை ஷமி பைனலாக மாற்றிய முகமது ஷமியின் சாதனைகள்!