சென்னை: கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கிய உலகக் கோப்பை 2023 தொடர், பாதி நிலையைத் தாண்டி விறுவிறுப்பை அடைந்துள்ளது. அதிலும், இந்திய அணி இதுவரை விளையாடிய 8 லீக் ஆட்டங்களிலும் அபாரமான வெற்றியை மட்டுமே அடைந்துள்ளது. மேலும், இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் மோதி வருகிறது. இதுவரை 16 புள்ளிகள் பெற்று, +2.456 ரன் ரேட் உடன் ஆடி வரும் இந்திய அணி, வருகிற 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “இந்த நாடு ஒரு மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்க உள்ளது. நாம் இறுதியாக உலகக் கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிறது. எனவே, மீண்டும் அந்த கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய விளையாட்டின் நிலைமை, கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வாய்ப்பைத் தர உள்ளது.
அதேநேரம், ஒருவேளை இந்த முறை உலகக் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனால், அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. தற்போதைய அணியில் 7 முதல் 8 வீரர்கள் உச்சத்தில் உள்ளனர். வீரர்களுக்குத் தேவையான வழிமுறைகளைக் கொடுத்து ஆடினால், இந்திய அணி வெற்றி பெறும். இது ஒரு அசாத்தியமானது மற்றும் அதற்கு சில காலங்கள் தேவை. அனைத்தும் ஒரே இரவில் நிகழ்ந்து விடவில்லை.