ஐதராபாத் :தெலங்கான மாநிலம் ஐதராபாத் மைதானத்தில் விளையாடியது பாகிஸ்தான் ராவல்பிண்டியில் விளையாடியது போன்ற உணர்வை தந்ததாக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தெரிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நேற்று (அக். 10) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரமா 108 ரன்களும் விளாசித் தள்ளினர். தொடர்ந்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் மற்றும் விக்கெட் கீப்பர் முகமாது ரிஸ்வான் அதிரடி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இருவர் கூட்டணி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தது. முடிவில் 48 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 4 சதங்கள் பதிவானது இதுவே முதல்முறை.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட்டாகாமல் 131 ரன்கள் குவித்தார். ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் கம்ரால் அக்மல் 124 ரன்கள் குவித்ததே உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.