புனே:13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று (நவ. 1) நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி என்பது முக்கியம், அதிலும் குறிப்பாக நெட் ரன்ரேட் அவசியம் என்ன என்பதை புரிந்து கொண்டு, ஒவ்வொரு அணியும் புதிய யுக்திகளை கையாண்டு விளையாடி வருகின்றன.
உலகக் கோப்பை போட்டிகள் பாதிக் கட்டத்தை கடந்து விட்ட நிலையில் இன்னும் சில போட்டிகளில் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல இருக்கும் 4 அணிகள் எவை என்பது தெரிந்து விடும். இதனால் இன்று நடக்கும் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து போட்டியானது இரு அணிகளுக்கு முக்கியமானது என்பதால் அரையிறுதி வாய்ப்பை நோக்கி நகர இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.