பெங்களூரு:ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 34 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் ஆட களம் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கத்தை அளித்தாலும், கான்வே 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் காயத்திலிருந்து மீண்டு வந்து களத்திற்குத் திரும்பிய கேன் வில்லியம்சன் - ரச்சினுடன் கைகோர்த்தார். இந்த கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தது. ஓவருக்கு 6, 7 ரன்கள் என மளமளவென ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ரச்சின் ஒரு கட்டத்தில் முகமது வாசிம் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து 108 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுபக்கம் அணியின் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தன.