அகமதாபாத்:நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம் பெறவில்லை. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக வெளியேறியதால், அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணிக்குள் நுழைந்தார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஷமி, இதுவரை விளையாடி 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் முகமது ஷமி விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, குறைந்த ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
அவரது எகானமி 5.01 ஆகும். மேலும், அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆடம் ஜாம்பா 22 விக்கெட்டுகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.
"எனது பந்து வீச்சில் அசாதாரணமானது என்று எதுவுமில்லை, நான் எப்போதும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பந்து வீசுவேன். மைதானத்தின் தன்மையைப் பொறுத்து பந்து ஸ்விங் ஆகிறதா, இல்லையா என்பதை கவனித்து பந்துகளை வீசுவேன். சில நேரங்களில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், ஸ்டம்பை குறிவைத்து பந்து வீசுவேன்.