அகமதாபாத்: 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், கிளைமாக்ஸ் காட்சியான இறுதிப் போட்டி நேற்று (நவ. 19) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தனது 6வது உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் உடைந்து போய் இருக்கின்றனர்.
ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி பந்து வீச்சில் கலக்கும் என்ற எதிர்பார்த்த இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தாலும், அதன்பின் லபுசேன் - ஹெட் கூட்டணி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது. இதனால் அந்த அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பை வரலாற்றில் 6வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "இதயம் நொறுங்கியது. இந்த தொடரில் அணியில் உள்ள ஒவ்வொறு வீரரும் நினைவில் வைத்துக் கொள்ள பல தருணங்கள் உள்ளன. குறிப்பாக விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு எனது தனிப் பாராட்டுக்கள்.
இருப்பினும், நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ஆஸ்திரேலிய அணியை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நேற்றைய போட்டியில் அவர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"அவர்கள் உடைந்து நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை" - ராகுல் டிராவிட்!