சென்னை:ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் வெற்றி:இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதும் 22வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிறகு 286 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்யுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வெற்றி கொண்டாட்டம்:இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பையில் முதன் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணியினர் உற்சாகமாக மைதானத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தனர். அப்போது, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுடன், இந்திய முன்னாள் வேகபந்து வீச்சாளரும், தற்போது வர்ணையாளராக பணியாற்றி வரும் இர்பான் பதான் ஒருவரையொருவர் பார்த்து, அன்பான அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டு நடனமாடி வெற்றியைக் கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த வீடியோவை இர்பான் பதான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த நெகிழ்வான தருணத்தில் ரஷித் கானின் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் சென்னையில் தங்களுக்கு பேராதரவு அளித்த ரசிகர்களுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முன்னதாக உலகக் கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வென்ற உற்சாகத்தில் ஆப்கான் வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் குத்தாட்டம் போட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி காலமானார்!