மும்பை:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி நாளை (நவ.15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சோதனை மேற்கொண்ட போலீசார், கள்ளசந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த 30 வயது நபரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட நபர் மலாட் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் கோத்தாரி என்பதும்’ கள்ளச்சந்தையில் டிக்கெட்டை நிர்ணயிக்கபட்ட விலையை விட 4 முதல் 5 மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளனர். அதாவது 27 ஆயிரம் முதல் 2.5 லட்சம் வரை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு எதிரான சில ஆவணங்களும் கிடைத்துள்ளன.
இதனையடுத்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420 மற்றும் 511-இன் கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த டிக்கெட்டுகளை அவர் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்தும், இந்த மோசடியில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.