டெல்லி :13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் இன்று (அக். 11) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருந்தது.
தொடக்க வீரர் சுப்மான் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதால் நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக கடந்த ஆஸ்திரேலியா ஆட்டத்தை போல் இஷான் கிஷன் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் மிடில் ஆர்டர் நல்ல வரிசை நிலையில் உள்ளது என்றே கூறலாம். கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய மூன்று பேரும் டக் அவுட் ஆன போதும், மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய கே.எல்.ராகுல், மற்றும் விராட் கோலி பொறுப்புனர்வுடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.