அகமதாபாத்:13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி - பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை இன்று (நவ.19) எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
நேருக்கு நேர்:ஆஸ்திரேலியா- இந்தியா இதுவரை 13 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 8 முறை ஆஸ்திரேலியா அணியும், 5 முறை இந்திய அணியும் வென்றுள்ளன. அதேபோல், இரு அணிகளும் இதுவரை 150 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 83 போட்டிகளிலும், இந்தியா 57 போட்டிகளிலும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரின் சுருக்கம்: சர்வதேச சம்மேளனத்தின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 அணிகள் முன்னேறின. இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்று, 140 கோடி இந்திய மக்களின் கனவை நனவாக்குமா ரோகித் சர்மா படை என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.