அகமதாபாத்(குஜராத்): 13ஆவது உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்குச் சற்று அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது.
இதையும் படிங்க:சாதித்து காட்டிய மதராஸ் மாப்பிள்ளை..! மேக்ஸ்வெல்லின் மனைவி யார் தெரியுமா?
இதனால், இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய குர்பாஸ், இப்ராகிம் இருவரும் முறையே 25 ரன்கள் மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ரஹ்மத் ஷா மற்றும் நூர் அஹமது தலா 26 ரன்கள் எடுத்தனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர் சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ஓட்டங்களைக் குவித்தார். டி காக் 41 ரன்களும், எய்டென் மார்க்ரம் 25 ரன்களும், டெவிட் மில்லர் 24 மற்றும் டெம்பா பவுமா 23 ரன்களும் எடுத்தனர். அண்டில் 39 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதையும் படிங்க:உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி, இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!