தர்மசாலா (இமாச்சலப்பிரதேசம்): ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 26 லீக் ஆட்டங்களில் முடிவடைந்த நிலையில், இன்று அதன் 27வது லீக் ஆட்டம் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த ஆட்டம் இமாச்சலப்பிரதேசம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். இந்த கூட்டணி தொடக்கம் முதலே அதிரடியான அட்டத்தில் ஈடுபட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர். பவர்ப்ளே முடிவில் இந்த கூட்டணி 118 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் சேர்த்த இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றது. முன்னதாக 2003 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கனடா அணிக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தகக்து.
டிரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர் ஆகியோரால் பிரிக்க முடியாத இந்த கூட்டணியை பேட்டிங் ஆல்ரவுண்டரான க்ளென் பிலிப்ஸ் பிரித்தார். டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்த போது பிலிப்ஸிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹெட் சதம் விளாசினார்.
23.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்த நிலையில், பிலிப்ஸ் பந்து வீசிய பந்தில் ஹெட் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஸ்மித் 18, மார்ஸ் 36, லபுசேன் 18, மேக்ஸ்வெல் 41, ஜோஸ் இங்கிலிஸ் 38 கம்மின்ஸ் 37 ரன்கள் என சீரான இடைவேளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்கள் முடிவில் 388 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பாக க்ளென் பிலிப்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்களையும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.