சென்னை:ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவுற்றது. இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு காண்போம்.
மேத்யூஸ் டைம்டு அவுட்:வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர் மேத்யூஸ் களத்திற்குள் தாமதமாக வந்த காரணத்திற்காக, ஒரு பந்து கூட ஆடாமல் அவர் டைம்டு அவுட் முறையில் வெளியேறினார். 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் டைம்டு அவுட் மூலம் அவுட்டான முதல் வீரர் என்ற எதிர்மறை சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார், மேத்யூஸ்.
தென் ஆப்பிரிக்கா: ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்று என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு அது இனிதான பயணமாக இருந்தது இல்லை. 5 முறை ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி உள்ள போதிலும், ஒரு முறைகூட அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.
மேற்கிந்தியத் தீவுகள்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்காதது இதுவே முதல் முறையாகும். 2 ஒரு நாள் மற்றும் டி20 உலகக் கோப்பை மற்றும்ஒரு சாம்பியன் கோப்பையை வென்ற அணியால், 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆப்கானிஸ்தான்:தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான் அணியாகும். நடப்புத் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடம் பெற்றது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளது.