கொல்கத்தா:13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று (நவ.11) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 44வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் பாகிஸ்தான் அணி மோதியது.
பறிபோன அரையிறுதி கனவு:நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்ட நிலையில் 4வது அணியாகப் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்தைத் தாண்டி பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமானால் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது 284 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை அடைய வேண்டும். பேட்டிங் செய்து கூட ஒரு வாய்ப்பை உருவாக்கலாம் என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு டாஸ் வென்று பேரதிர்ச்சி கொடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விட்டது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்து 84 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 60, ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.