லக்னோ: ஐசிசி உலகக் கோப்பை தொடங்கி 13 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று 14-வது லீக் ஆட்டம் லக்னோவின் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களம் இறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்த கூட்டணி, ஓவருக்கு 5 ரன்கள் குறையாமல் அடித்து அவர்களது நிதானமான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ரன்களை சேர்த்த வண்ணம் இருந்தனர்.
நல்ல தொடக்கத்தை அளித்த இந்த இருவருமே அரைசதத்தை கடந்தனர். ஒருகட்டத்தில் அணியின் ஸ்கோர் 21.3 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் இருக்க, கம்மின்ஸ் பந்து வீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து பதும் நிஸ்ஸங்கா ஆட்டமிழந்தார். இதனால் இந்த கூட்டணி பிரிந்தது. அடுத்து சில ஓவர்களிலேயே குசல் பெரேராவும் 78 ரன்களில் வெளியேற. அதனைத் தொடர்ந்து வந்த குசல் மெண்டீஸ், சமரவிக்ரமா, தனஞ்சய டி சில்வா, வெல்லலகே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 43.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆன இலங்கை அணியால் 209 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்களையும், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் 3 ஓவர்கள் முடிவில் 24 ரன்கள் எடுத்த நிலையில், வார்னர், தில்ஷான் மதுஷங்க பந்து வீச்சில் எல்பிடபள்யூ ஆகி 11 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின் வந்த ஸ்மீத் டக் அவுட் ஆக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் மார்ஷ் - லபுசேன் கூட்டணி சிறிது நேரம் நிலைத்து நின்று, அணிக்கு ரன்களை சேர்த்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த மார்ஷ் அரைசதம் கடந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து, லபுசேனுடன் கைக்கோர்த்தார் ஜோஷ் இங்கிலிஸ். இந்த கூட்டணி வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த போது லபுசேன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோஷ் இங்கிலிஸ் 58 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்து இலங்கை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. க்ளென் மேக்ஸ்வெல் 31 ரன்களுடனும், ஸ்டோனிஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மதுஷங்க 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த நியூசிலாந்து வீரர்கள்!