தர்மசாலா: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அதன் 15வது லீக் ஆட்டத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 2 மணிக்கு தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணி மோதுகிறது. இந்த ஆட்டம் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை, தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலேயே ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 428 ரன்களை குவித்தது. அதன்பின் இலங்கை அணியையும் ஆல் அவுட் செய்து, 102 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி, முதல் போட்டியிலேயே தாங்கள் யார் என்று நிரூபித்தனர்.
அதேபோல், இரண்டாவது போட்டியில், இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியை திக்குமுக்காட செய்ய வைத்தது, தென்னாப்பிரிக்கா. தொடர்ந்து பந்து வீச்சில் அசத்திய தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்து, 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அவர்களது நெட் ரன்ரேட் +2.360-வில் உள்ளது.
குறிப்பாக, தொடக்க வீரரான டி காக் இரண்டு போட்டிகளிலுமே சதம் அடித்து அசத்தினார். அதேபோல், வான் டெர் டுசென் மற்றும் மார்க்ரம் இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினர். பந்து வீச்சில் ரபாடா இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், சுழற்பந்து வீச்சில் மகாராஜ் பலம் சேர்க்கும் விதமாக உள்ளார்.