அகமதபாத்:ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியுற்றது. இதனையடுத்து பல்வேறு விமர்சனங்களும் ஆதரவுகளும் இந்திய அணியை சூழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.
சிறந்த கேப்டன் ரோகித் சர்மா:இது குறித்து அவர் கூறுகையில் “ இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் அற்புதமானது. அவர் அணியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவர் எங்களுக்கு தொனியை அமைத்த விதம், நாங்கள் எந்த வழியில் விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்தியது.
மேலும் நாங்கள் ஒரு நேர்மையான பிராண்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினோம். அதைச் செய்வதில் ரோகித் உறுதியாக இருந்தார். ஒரு அணியை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக செயல்பட்டார். ஒரு வீரராகவும், தலைவனாகவும் ரோகித் செயல்பட்ட விதத்தைப் பற்றி வார்த்தைகளால் கூற முடியாது.
ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பனி இருந்தது என்று நான் கூற மாட்டேன் காரணம் மாலை நேரத்தில் பந்து பேட்டிங்கிறகு சாதகமாக வந்தது. நாங்கள் ஸ்ட்ரைக்கை சுழற்றினோம் ஆனால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை.
ராகுல் டிராவிட் எமோஷனல்:தோல்விக்குப் பிறகு டிரஸ்ஸிங் அறையில் நிறைய உணர்ச்சிகள் இருந்தன. ஒரு பயிற்சியாளராக அவர்கள் உடைந்து நிற்பதை பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் இந்த தொடருக்காக அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்னென்ன தியாகங்களை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் இது தான் விளையாட்டு. இதில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். நாளையும் வழக்கம் போல் சூரியன் உதிக்கத்தான் போகின்றது. நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று வரும் காலங்களில் அதை அப்ளை செய்வோம். நாங்கள் இந்தியாவில் உள்ள 11 நகரங்களுக்கு சென்று விளையாடி இருக்கிறோம் எல்லாப் போட்டிகளிலும் ரசிகர்கள் திரளாக வந்து ஆதரவு கொடுத்தார்கள். என்ன நடந்தாலும் சரி சிறந்தது அணி வெற்றி பெற்றது.
பயிற்சியாளராக தொடர்வீர்களா?என்னுடைய பதவிக்காலம் குறித்து தற்போது நான் சிந்திக்கவில்லை. எங்களுடைய முழு கவனமும் இந்த தொடரில் தான் இருந்தது தற்போது தான் அதிலிருந்து வெளியே வந்துள்ளோம். அதனால் பதவிக்காலம் குறித்து யோசிக்க நேரமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை என்றார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
இதையும் படிங்க: உலகக் கோப்பை தோல்விக்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன?