டெல்லி:ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம் - இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி:வங்கதேசம், இலங்கை என இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் இழந்து விட்டது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவதற்கான போட்டி இன்னும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் டாப் - 8 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அந்த தொடருக்குத் தகுதி பெறும். ஏற்கனவே 6 அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களைப் பிடிக்க இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள இலங்கை அணி 2 வெற்றி 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியளில் 7வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணியை பொறுத்தவரையில் 7 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி 6 தோல்விகளுடன் 2 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியளில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெல்வது இரு அணிகளுக்கு முக்கியம் ஆகும்.