லக்னோ:கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ்- நெதர்லாந்து போட்டியைக் காண வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி உலகக் கோப்பை குறித்து பேசுகையில், "நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இப்படி விளையாடும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்று பலர் நினைக்கின்றனர்.
இருப்பினும் கோப்பையைக் கைப்பற்ற நாம் முதலில் அரையிறுதியைக் கடக்க வேண்டும். இதற்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும் சவாலாக இருப்பார்கள். ஹர்திக் பாண்டியா, அணியின் மிக முக்கியமான வீரர். தற்போது, காயத்திலிருந்து மீண்டு வரும் பாதையில் அவர் உள்ளார். தற்போது, அவர் அணியில் இல்லாவிட்டாலும் இந்திய அணி வலிமையானதாகவே உள்ளது” என்றார்.
பங்களாதேஷ்- நெதர்லாந்து போட்டி குறித்துப் பேசுகையில், “தற்போது பங்களாதேஷ் அருகில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றதால் ஏராளமான ரசிகர்கள் வந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது.
நடப்பு உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார். வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒருவரைச் சார்ந்து நடைபெறாது எனவும் அவர் கூறினார்.