அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடைபெறுவதை முன்னிட்டு குஜராத் அகமதாபாத் நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (அக். 13) நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டின் ஹை லோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு உள்ளதால் அந்த இடமே திருவிழா திடல் போல் காட்சி அளிக்கிறது.
நரேந்திர மோடி மைதானம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்களை கையாளும் தன்மை கொண்டது. இந்த ஆட்டத்தில் அலை கடல் என திரண்டு வரும் ரசிகர்களை கட்டுப்படுத்த 11 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 150 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மைதானத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து ஏதுவாக போக்குவரத்து விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.