தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ICC Women's World Cup 2022: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; அசத்திய பூஜா வஸ்த்ரகர்!

மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. பேட்டிங்கில் 59 பந்துகளுக்கு 67 ரன்களைக் குவித்து இந்தியாவை கரைசேர்த்த பூஜா வஸ்த்ரகர் ஆட்டத்தின் சிறந்த வீரராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

ICC Womens World Cup 2022
ICC Women's World Cup 2022

By

Published : Mar 6, 2022, 4:10 PM IST

நியூசிலாந்து:ஐசிசி மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் லீக் ஆட்டங்கள் நியூசிலாந்தில் நேற்று முன்தினம் (மார்ச் 4) தொடங்கியது. இந்நிலையில், நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இப்போட்டி மவுன்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை 6 மணியளவில் தொடங்கியது.

கேப்டன் மிதாலி ராஜ், 1999ஆம் ஆண்டு ஒருநாள் அரங்கில் அறிமுகமான பிறகு, 2000, 2005, 20009, 2013, 2017, 2022 என ஆறாவது உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம், ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமையும், மூன்றாவது கிரிக்கெட்டர் என்ற பெருமையும் மிதாலி பெற்றுள்ளார்.

ஆடவர் உலக்கோப்பையில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டாட் ஆகியோர் தலா ஆறு முறை விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட் கொடுத்த ஸ்மிருதி - தீப்தி

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா களமிறங்கினர்.

ஷஃபாலி ரன்னேதும் இன்றி வெளியேற, மந்தனாவுடன் தீப்தி சர்மா இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த இணை 92 ரன்களை சேர்த்தபோது, தீப்தி 40 (57) ரன்களில் சந்து பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மந்தனா 71 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், சிறிது நேரத்திலேயே 52 ரன்களில் அனம் அமினிடம் வீழ்ந்தார்.

இதன்பின்னர், இணைந்த கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்பீரித் கௌர் ஜோடி மிகவும் பொறுமையாக விளையாடியது. இருப்பினும், கௌர் 5 (14) ரன்களிலும், ரிச்சா கோஷ் 1 (5) ரன்னிலும், மிதாலி 9 (36) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஃபினிஷ் செய்த ராணா - பூஜா

இதையடுத்து, ஜோடி சேர்ந்த சினே ராணா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் அற்புதமான சீரான வேகத்தில் ரன்களைக் குவித்தனர். இந்த ஜோடி ஏறத்தாழ 16 ஓவர்களுக்கு நிலைத்து நின்று ஆடியது. பூஜா 48 பந்துகளிலும், ராணா 45 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

இந்தியா 33.1 ஓவரில் 114/6 என்ற இக்காட்டான நிலையில் இருந்தது. இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 122 ரன்களைக் குவித்து, இந்திய அணியை கரை சேர்த்தது.

இறுதி ஓவரில் பூஜா 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் நிதா தர், நஷ்ரா சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டயானா பைக்கு, அனம் அமின், பாத்திமா சானா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பம்மிய பாகிஸ்தான் பேட்டிங்

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க பேட்டர்களான சிட்ரா அமீன், ஜவேரியா கான் பத்து ஓவர்களுக்கு நிலைத்து நின்று விளையாடினர். அதற்கடுத்த ஓவரில் ஜவேரியா 11 (28) ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் பிஸ்மா மஹ்ரூஃப் சிறிதுநேரம் கழித்து 15 (25) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து, சில ஓவர்களில் ஒமைமா சோஹைல் 5 (4) வெளியேற, தொடக்க பேட்டர் அமீன் 30 (64) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின், இந்திய பந்துவீச்சாளர்களான ஜூலன் கௌசாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட், சினே ராணா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டைகளை வீழ்த்தி பாகிஸ்தானை பந்தாடினர்.

முதல் வெற்றி

இதனால், பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்-அவுட்டாக, 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.

இந்திய பந்துவீச்சு தரப்பில் ராஜேஸ்வரி 4 விக்கெட்டுகளையும், ஜூலன் கௌசாமி, சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்னா சிங், தீப்தி சர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா தடுமாற்றமடைந்து வந்த நேரத்தில், எட்டாவது வீரராக களமிறங்கி 67 ரன்களைக் குவித்து வெற்றிக்கு பெரும்பங்காற்றிய பூஜா வஸ்த்ரகர் ஆட்டத்தின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். வரும் மார்ச் 8ஆம் தேதி, இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: ஷேன் வார்னே: 15 ஆண்டுகால கிரிக்கெட்... எண்ணற்ற சாதனைகளும்... போராட்டங்களும்!

ABOUT THE AUTHOR

...view details