நியூசிலாந்து: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் சுற்று ஆட்டங்கள் மார்ச் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. அரையிறுதிச்சுற்றில், ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியும், இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் இன்று (ஏப். 4) நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்டர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
அலிசா ஹீலி - ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்களை், அலிசா ஹீலி - பெத் மூணே ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 156 ரன்கள் என 45.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 316 ரன்களை எடுத்தது. குறிப்பாக, அலிசா 170 ரன்களை குவித்து அசத்தினார்.
இதையடுத்து, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஒருபுறம் ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் மட்டும் குறையவில்லை. இதனால், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரலியா அணி, 356 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அன்யா ஷ்ரப்சோல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
357 என்ற பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களிலேயே 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக மகளிர் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதற்கு முன்னர், 1978, 1982, 1988, 1997, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.