துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல்களை இன்று (செப். 1) வெளியிட்டுள்ளது.
தற்போது இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னிலையில் ரோஹித்
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் முதல் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதில், ரோஹித் 773 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 766 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து தொடரின் மூன்றாவது போட்டியில் 19, 59 ரன்களை குவித்திருந்த ரோஹித், முதல்முறையாக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன், 2017ஆம் ஆண்டில் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் இருந்தபோது, புஜாரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்தார். இதுதான், கோலியை வேறு இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் முந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
6 வருடங்களுக்கு பிறகு ரூட்
தரவரிசையில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 916 புள்ளிகளுடன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்கள் உள்பட 507 ரன்களுடன் உட்சபட்ச ஃபார்மில் இருந்து வரும் ரூட், கடந்த 2015ஆம் ஆண்டுதான் கடைசியாக முதலிடத்தில் இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் இரண்டாவது இடத்தில் இருந்த ரூட், அந்த போட்டியில் 121 ரன்களை குவித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி தற்போது முதலிடத்தை பிடித்தார். தற்போது, கேன் வில்லியம்சன், ரூட்டை விட 15 புள்ளிகள் பின்தங்கி, 901 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் (891), மார்னஸ் லபுஷேன் (878) ஆகியோர் முறையே மூன்றாம் நான்கு இடத்தில் உள்ளனர். மேலும், இந்திய பேட்ஸ்மேன்கள் புஜாரா மூன்று இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்திலும், நான்கு இடங்கள் பின்தங்கி 12ஆவது இடத்திலும் உள்ளனர்.