துபாய்:இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளின் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (செப். 8) வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டிக்கு முன்னர், ரோஹித் 773 புள்ளிகளுடனும், விராட் 766 புள்ளிகளுடனும் தரவரிசையில் முறையே ஐந்தாவது, ஆறாவது இருந்தனர். நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அடித்த அசத்தல் சதம் மூலம் 50 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
ரோஹித்தின் எழுச்சி
இதன்மூலம், ரோஹித் 813 புள்ளிகளுடன் அதே ஐந்தாவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 783 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு 13 புள்ளிகள் குறைந்தாலும், அவர் முதலிடத்திலேயே (903) நீடிக்கிறார்.
இதைத்தவிர, நான்காவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த ஷர்துல் தாக்கூர் 59 இடங்கள் முன்னேறி 79ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஒலி போப் முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் அடித்ததன் மூலம், ஒன்பது இடங்கள் முன்னேறி 49ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அஸ்வின், ஜடேஜா
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து இரண்டாம் இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர் தரவரிசையில், இந்தியா சார்பில் ஜடேஜா இரண்டாவது இடத்திலும், அஸ்வின் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து சார்பில் நான்காவது டெஸ்டில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள், டி20-இல் இந்தியா
மேலும், ஐசிசி டி20, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையையும் வெளியிட்டுள்ளது. ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் உள்ளனர். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா (7ஆவது இடம்) இடம்பெற்றுள்ளார்.
டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்திய வீரர்கள் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும், லோகேஷ் ராகுல் ஆறாவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் இந்தியா சார்பில் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷிகர் தவான் விவாகரத்து - மனைவி அறிவிப்பு