ஐதராபாத் :2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அண்மையில் நடந்த முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அதற்கு முன் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட தொடர்களில் பெரிய அளவில் சோப்பிக்கத் தவறியதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த அந்நாட்டு அரசு, தனிக் குழுவை நியமித்தது.
இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அரசின் தலையீடு மற்றும் தனிச்சையாக செயல்படத் தவறியதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், வாரியத்தில் இலங்கை அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் அதுவரை எந்த சர்வதேச அணியிடனும் விளையாடக் கூடாது என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தொடரை தென் ஆபிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக ஐசிசி அறிவித்து உள்ளது.
ஐசிசி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இலங்கையில் திட்டமிடப்பட்ட தேதிகளை ஒட்டி தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இதே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அப்போது பயன்படுத்தப்பட்ட பென்னோனி மற்றும் போர்ட்செப்ஸ்ட்ரோம் பகுதிகளில் ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசிட் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு தொடரில் கலந்து கொண்ட டாப் 11 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள ஐந்து இடங்களுக்கு நமீபியா, நேபாள, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகள் மூலம் தேர்வாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மூன்று முறையும், இரண்டு முறை பாகிஸ்தானும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்று உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் தலா ஒருமுறை உலக கோப்பை தொடரை கைப்பற்றி உள்ளது. நடப்பு சீசனை வென்று இந்தியா வரலாறு படைக்குமா என விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க :உலக கோப்பை இறுதிப் போட்டியில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்! இதையே வேலையா வச்சுருக்கியா பா?