துபாய்: 2024 - டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, கனடா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று (ஜன.05) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸில் தொடங்கும் இத்தொடர் ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸின் பார்படாஸில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குருப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.