டெல்லி: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 13வது எடிசன் வருகிற அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை இந்தியாவில் மட்டும் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கற்று விளையாடுகிறது.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களுக்கு முன்னேறும் அணிகள், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க:ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி; நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு!
உலகக் கோப்பை தொடங்க இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, இறுதிப் போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு (Runner Up) 2 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூபாய் 16.5 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர் 6.63 கோடியும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழு நிலையில் வெளியேற்றப்படும் அணிகளுக்கு தலா 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.82 லட்சம்), அதே போல் ஒவ்வொரு குழுநிலையிலும் வெற்றி பெறுபவர்களுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.33 லட்சம்) எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய பாஜக எம்பியை எச்சரித்த மக்களவை சபாநாயகர்!