கவுகாத்தி (அசாம்): ஐசிசி உலகக் கோப்பைக்கான போட்டிகள் அக்டோபர் 5ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில், போட்டியிடும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செப்.30) நான்காவது ஆட்டமாக நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துடன் இந்தியா விளையாட இருந்தது.
இந்த போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்ஸபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இதன்படி, இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டபோது, இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் ஹெட்ஸ் கேட்க, டெய்ல்ஸ் விழுந்ததால் இந்திய அணி டாஸ் வென்று, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
ஆனால், அதனைத் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மழை விடாமல் தொடர்ந்து பெய்ததை அடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து, இந்தியா இங்கிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் அடுத்த பயிற்சி ஆட்டம் நெதர்லாந்து அணிக்கு எதிராக வருகிற அக்டோபர் 3ஆம் தேதி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Asian Games 2023 : ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம்! டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய அணி அபாரம்!