லக்னோ: 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி, இன்று (அக்.7) காலை 10.30 மணிக்கு தரம்சாலா ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸை தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் தொடங்கினர்.
தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்களான ரஹ்மத் 18, ஷாஹிதி 18 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அரைசதம் நோக்கி சென்ற தொடக்க வீரரான குர்பாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் 47 ரன்களில் வெளியேற, அதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.