டெல்லி:உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் 5வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற, இந்திய அணி நாளை (அக்-11) டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இதில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு கடினமான பணி என்னவென்றால், வரவிருக்கும் போட்டிகளில் பிளேயிங் லெவன் அணியைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் உள்ளது. ஏனென்றால் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து ஆடி வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வினின் ரோல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் 3 சுழற்பந்து வீச்சாளர்களிடம் களமிறங்கியது. மூவரும் ஆஸ்திரேலிய அணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் (10 ஓவர்களில் 1-34), குல்தீப் யாதவ் (2-42) மற்றும் சுழல் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (3-28) ஆகியோர் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் ஆகும். வரும் காலங்களில் அதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள், கிரிக்கெட் வல்லுநர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணி நாளை (அக்-11) டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தியாவின் மற்ற மைதானங்களை ஒப்பிடும்போது டெல்லி மைதானத்தில் பவுண்டரி தூரம் மிகவும் குறைந்ததாகும்.