துபாய்:2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இதற்கடுத்து 2024 ஒலிம்பிக் தொடர் ப்ரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், 2028 ஒலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெற இருக்கிறது.
வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து முனைப்பு காட்டிவருகிறது. கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐசிசி கடந்தாண்டு ஒரு ஒலிம்பிக் பணிக்குழுவை நியமித்திருந்தது.
கோடிக்கணக்கானவர்களின் கனா
இதுகுறித்து ஐசிசி தலைவபர் கிரெக் பார்க்லே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது தொடர்பான முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
ஒலிம்பிக்கில் அதை சேர்ப்பதன் மூலம், கிரிக்கெட்டின் எதிர்காலம் வலுவடையும் என நாங்கள் நம்புகிறோம். கோடிக்கணக்கான ரசிகர்களில் 90 விழுக்காட்டினர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எளிதான காரியமில்லை
பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மட்டும் கிரிக்கெட்டுக்கு 92 விழுக்காடு ரசிகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் ஏறத்தாழ 30 லட்ச ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் அவர்களின் கிரிக்கெட் நாயகர்கள் ஒலிம்பிக் பதக்கத்திற்காக போட்டி போடுவதை காண ஆவலாக உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கை கரோனா பேரிடர் காலத்திலும் சிறப்பாக நடத்தியதற்கு சர்வேதச ஒலிம்பிக் குழுவிற்கு பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது எளிதான காரியமில்லை, ஏனென்றால் பல விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இணைவதற்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
ஆனால், கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு இதுதான் சிறந்த தருணம் என்பதால் இப்போது பெரும் முன்னெடுப்பை மேற்கொள்ள இருக்கிறோம்" என்றார்.
ஒலிம்பிக்கிற்கு சிறப்பு
அமெரிக்க கிரிக்கெட் சங்கத் தலைவர் பராக் மராத்தே கூறுகையில், தற்போது காலம் கனிந்துவிட்டது. அமெரிக்கா கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும். அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் சிறப்பம்சமாக கிரிக்கெட் இருக்கும். மேலும் அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கும் இது உதவும்" என்றார்.
இதையும் படிங்க: உண்மையான தியாகம்: தடகள வீராங்கனை ஹீமா தாஸ் தனலட்சுமிக்கு ஆறுதல்