தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IBSA World Games: இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை!

Indian women's blind cricket team : ஐபிஎஸ்ஏ(IBSA) உலக விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்தியா
India

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 1:22 PM IST

பர்மிங்காம்: 7வது உலக பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகினறனர். இதில் இந்தியா ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.

இந்த நிலையில், தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் தங்கம் வென்றனர். இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று அசத்திய நிலையில் இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Virat Kohli: விராட் கோலி 4வது வீரராக களம் இறக்க ஆதரவு....ஏபி வில்லியர்ஸ் கருத்து!

பார்வையற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச பார்வையற்றோர்களுக்கான விளையாட்டு சம்மேளனம், முதல் முறையாக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் தொடரை தொடங்கி உள்ளது. இதன் முதல் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 20 ஓவர்கள் வடிவிலான கிரிக்கெட் போட்டியில், லீக் மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே தடுமாறிய ஆஸ்திரேலியா அணி பவர்பிளே முடிவில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதன் பின் சிரான இடைவெளியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தன.

இதனையடுத்து மழையின் காரணமாக ஆட்டம் டிஎல்எஸ் முறையில் 42 ரன்கள் என இலக்கு குறைக்கப்பட்டது. இதனை துரத்திய இந்திய அணி 3.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து இறுதி போட்டியில் வென்றது. இதன் மூலம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இதேபோல் ஆடவர் பிரிவில், நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய பார்வையற்றோர் ஆடவர் அணி தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:World athletics championships: அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் மூன்றாவது முறையாக சாம்பியன்!

ABOUT THE AUTHOR

...view details