ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி டெல்லியில் இருந்து டேராடூனுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஓட்டிச்சென்ற ரிஷப் பந்த் தூங்கியதால், சாலை தடுப்புச்சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் காயங்களுடன் ரிஷப் பந்த் உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பந்துக்கு, கால் மூட்டில் இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பந்த் பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதற்கிடையே, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பந்த், நேற்று (பிப்.7) இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், 'வெளியே அமர்ந்து சுதந்திர காற்றை சுவாசிப்பதை ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ரிஷப் பந்த் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறுகையில், "நான் ரிஷப் பந்த்தை மிகவும் நேசிக்கிறேன். அவர் விரைந்து பூரண குணமடைய வேண்டும். அப்போது தான் அவரை நேரில் சென்று கன்னத்தில் அறைய முடியும். தவறு செய்யும் குழந்தைகளை பெற்றோர் அடித்து திருத்துவது போலத்தான் இதுவும். நான் பந்த்தை நேசிக்கிறேன். ஆனால், அதே நேரம் அவர் மீது எனக்கு கோபம் வருகிறது. ஏன் இந்த காலத்து இளைஞர்கள் இதுபோன்ற தவறை செய்கின்றனர்? பந்த் இல்லாததால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பாதிக்கப்பட்டுள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில் அணி நிர்வாகம் தடுமாறுகிறது" எனக் கூறியுள்ளார்.
தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் பந்த், குறைந்தது 6 மாதம் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்குள் அவர் உடல் தகுதி பெற்று விடுவார் என ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், நாளை (பிப்.9) தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி உள்ளிட்ட தொடர்களில் பந்த் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "இதுவே சரியான தருணம்": ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் ஓய்வு!