சென்னை: கோடிக்கணக்காண இதயங்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட்டில் ஒரு சாதாரண தொடரை வெல்வதற்கும், உலக கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்வதற்கும், ஹீரோவாக மாறுவதற்கும், கோடிக்கணக்கான இதயங்களை கலங்கடிப்பதற்கும் ஒரு நொடி போதும்.
2023ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விராட் கோலியை பேட் கம்மின்ஸ் வீழ்த்தியதும் சரி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெறும் என உலகமே நினைத்த மாத்திரத்தில் தன் வசம் விளையாட்டை மாற்றி கிளென் மேக்ஸ்வெல் 200 ரன்கள் அடித்த போதும் சரி, ரசிகர் பட்டாளத்தின் உற்சாகமும், மெளனம் அனைத்துமே நிகழ்வது அந்த ஒரு நொடியில் தான்.
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பையில் பல இதயங்கள் நொருங்கி இருந்தாலும், பல்வேறு சாதனைகள் பல வீரர்களால் நிகழ்த்தபட்டிருக்கிறது. அதனை பற்றியதே இந்த தொகுப்பு.
பேட் கம்மின்ஸ்:இவரது தலைமைப்பண்பும், தந்திரங்களும், தனித்திறனுமே ஆஸ்திரேலிய அணியை அரியணையில் ஏற்றியுள்ளது. முன்னால் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பிறகு இவரது கேப்டன்ஸியைப் பற்றி உலகம் பேசுகிறது. அதன் காரணம், ஆஸ்திரேலிய அணியை கம்மின்ஸ் உருமாற்றி வைத்திருப்பதே. இவர் கேப்டன் பொறுப்பிற்கு வரும்பொழுது விமர்சித்த அதே ரசிகர்கள், தற்போது இவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டில் இவரது கேப்டன்ஸியின் கீழ் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 5-இல் வெற்றி பெற்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இதில் டெஸ்ட் சாம்பியன்ஸிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியதும் அடங்கும். இவ்வளவுக்கும் ஏன், உலகக் கோப்பையின் முதல் 2 போட்டிகளை மிகப்பெரிய தோல்வியுடனேயே ஆரம்பித்தது ஆஸ்திரேலிய அணி.
அதன்பின் விளையாடிய 9 போட்டிகள் வரிசையாக வென்றதன் விளைவாக ஆறாவது உலகக் கோப்பையை கைகளில் ஏந்தினர். குறிப்பாக கம்மின்ஸின் திட்டங்கள் அனைத்தும் இறுதிப் போட்டியில் சரியாக செயல்பட்டது. விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய அந்த கனம், ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவர் போட்டிக்கு முன்பு கூறியிருந்தது போலவே மெளனம் அடையச் செய்தார். கோப்பையில் ஆஸ்திரேலியாவின் பெயரை உறுதி செய்தது, அந்த ஒரு நொடிதான்.
இப்படி இந்த ஆண்டு முழுவதும் அவருக்கானதாகவே மாறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைக் காட்டிலும் ஆஸ்திரேலியர்கள் பெரிதாக பார்க்கும் ஆசஸ் (ashes cup) கோப்பையை ரிடைன் செய்ததாக இருக்கட்டும், உலகக் கோப்பையாக இருக்கட்டும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பாக இருக்கட்டும், ஆஸ்திரேலியாவின் வெற்றியின் அனைத்திலுமே பேட் கம்மின்ஸ் ஒரு பெரும் அங்கமாக இருந்துள்ளார்.
முகமது ஷமி:இந்த உலகக் கோப்பை முழுவதுமே முகமது ஷமி ஒரு வியப்புதான். மொத்தம் ஆடிய 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள். அதில் மூன்று 5 விக்கெட் ஹாலும், 4 விக்கெட்களும் அடங்கும். முகமது ஷமிக்கு கொஞ்சம் டிலேவாகத்தான் பிளேயிங் 11-இல் இடம் கிடைத்தது.
வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில்தான் அது நிகழ்ந்தது. ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட, அதன் பின்பே ஹமிக்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் நம்மை நிருபிக்க முடியும்’ என்ற அந்த ஷமியின் வார்த்தைகளில் அடங்கி இருந்த அத்தனை வெறிகளையும், இந்த உலகக் கோப்பையில் அவர் காண்பித்தார்.
ஆனால், இதை எவருமே எதிர்பார்க்கவில்லை. பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித் சக வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்குமே ஆச்சரியம். இந்திய அணி இறுதிப் போட்டி வரை வந்ததற்கு முக்கியப் பங்கு இவருடையது. இந்திய அணிக்காக உலகக் கோப்பை தொடர்களிலும் அவரே அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் (55). இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக 5 விக்கெட் ஹால்களை எடுத்தவர் (5). இதற்கெல்லாம் அங்கீகாரமே, அவர் இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருதிற்கு தேர்வாகியுள்ளது.
கிளென் மேக்ஸ்வெல்:இந்த ஆண்டு உலகக் கோப்பையில் முகமது ஷமி ஒரு வியப்பு என்றால், மற்றொரு வியப்பு கிளென் மேக்ஸ்வெல். தொடக்க வீரர்கள் இரட்டை சதங்கள் விளாசிய பட்டியலுக்கு மத்தியில், 4 டவுனில் களம் இறங்கும் மேக்ஸ்வெல், 200 ரன்கள் அடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலக்கின் 80 சதவீத ரன்களை மேக்ஸ்வெல் அடித்திருந்தார். 292 இலக்கை வென்றதில் கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில், 21 ஃபோர்கள் மற்றும் 10 சிக்சர்கள் என 201 ரன்களை விளாசியிருந்தார். இந்த அசாத்தியமான இன்னிங்ஸாலேயே ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியை வென்றது.
தனது காலில் ஏற்பட்ட காயத்தின்போது அவர் அணியின் வெற்றி முக்கியத்துவத்தை மனதில் வைத்து, எந்த பந்து வீச்சாளரை அட்டாக் செய்ய வேண்டும், எந்த பந்து வீச்சாளரை பொறுமையாக கையாள வேண்டும் என்ற நுணுக்கத்துடன் விளையாடினார்.
91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருக்கும் ஒரு அணி எவ்வாறு வெற்றி பெறும். நம்பிக்கைக்குரிய வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் என அனைவரும் ஆட்டமிழந்த நேரத்தில், அணிக்கு முக்கிய வெற்றியைப் பெற்று தந்து அரையிறுதிக்கு நகர்த்தினார், மேக்ஸ்வெல். அவரும், கம்மின்ஸும் சேர்ந்து 202 ரன்களை அடித்திருந்தனர். இதில் 12 ரன்களை மட்டுமே கம்மின்ஸ் அடித்தார். மீதம் உள்ள 190 ரன்கள் மேக்ஸ்வெல் பேட்டில் இருந்து வந்த ரன்கள் ஆகும்.
சேஸிங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர், தொடக்க வீரர்கள் அல்லாத மிடில் ஆர்டரில் இரட்டை சதம் அடித்த வீரர், அதிவேகமாக அடித்த இரண்டாவது இரட்டை சதம், ஆஸ்திரேலியா சார்பில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என ஒரே நாளில் பல்வேறு சாதனைகளை மேக்ஸ்வெல் படைத்தார்.
விராட் கோலி:2012 மார்ச் 16ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை அடித்த நாள் அது. ஒருநாள் போட்டியில் 49வது சதம். சச்சின் டெண்டுல்கர் பேட்டை சுழற்றும் போதெல்லாம், சாதனைகளைப் படைத்து கொண்டே இருந்தார். ஒட்டுமொத்த உலகமும் இவரது சாதனையை முறியடிக்க எவராலும் முடியாது என மார்தட்டி கொண்டனர். ஆனால், அவரை விட அதிவேகத்தில் ஓடி, அவரை விட உச்சத்தில் நிற்கிறார், விராட் கோலி.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் கோலியின் தோளில் தட்டிக் கொடுத்து களத்திற்கு அனுப்பி வைத்தார், சச்சின். அவர் கொடுத்த உத்வேகத்துடன் ஓடத் தொடங்கினார் விராட் கோலி. அப்படியான கோலி, இன்று அவரை மிஞ்சியிருக்கிறார் சாதனைகளில். சச்சினின் ஒவ்வொரு சாதனைகளையும் தகர்ப்பது மட்டுமல்லாது, புதிய சாதனைகளையும் படைத்து வருகிறார், கோலி.
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், தனது 50வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் யாரும் செய்திறாத சாதனை அது. சச்சினின் சாதனையை அன்னார்ந்து பார்த்தவர்கள் தற்போது விராட் கோலியின் சாதனையைக் கண்டு மலைத்து போய் உள்ளனர்.
இதையும் படிங்க:வில்வித்தையில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஷீத்தல் தேவி.. எதற்காக தெரியுமா?