கொல்கத்தா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவ. 15) நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை எடுத்தது. விராட் கோலி (117ரன்), ஸரேயாஸ் ஐயர் (105 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தனர்.
398 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி, நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை சீர்குலைத்தார். 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தது மட்டுமல்லாமல் பல்வேறு வரலாற்று சாதனைகளையும் முகமது ஷமி படைத்தார். இந்த நேரத்தில், முகமது ஷமி அணிக்குள் நுழைந்தது எப்படி என ஆராய்ந்தால் அது எதிர்பாராத ஒன்று தான்.
கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக வெளியேறியதால், அவருக்கு பதிலாக முகமது ஷமி அணிக்குள் நுழைந்தார் என்றால் அது தான் உண்மை. இந்த சம்பவத்தை விதியின் சூழ்ச்சி என்பதா அல்லது எதிர்பாராத நிகழ்வு எனக் கருதுவதா என்பதே கேள்வி.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக களமிறங்கிய முகமது ஷமி, இனி அணியில் அவரை மாற்றவே முடியாது என்ற நிலையை உருவாக்கி உள்ளார். மதியால் விதியை வெல்வது எனக் கூறும் பழமொழியில் தனது திறமையால் விதியையை வீழ்த்தி உள்ளார் முகமது ஷமி என்றால் அது மிகையாகாது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தியத்ன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முகமது ஷமி. 2011ஆம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷாகீர் கான் 21 விக்கெட் வீழ்த்தியதே இதுவரை ஒரு இந்திய வீரரின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முகமது ஷமி சமன் செய்து உள்ளார்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்று முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து முகமது ஷமி வரலாறு படைத்து உள்ளார். அதேபோல் ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றி 50 விக்கெட், அதிவேக 50 விக்கெட் என அடுத்தடுத்து இரண்டு சிறப்புகளை செய்து உள்ளார் ஷமி.
நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் 7 விக்கெட்டுகள் எடுத்ததே, அந்த அணிக்கு எதிரான ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஷமி சமன் செய்து உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தரப்பில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார்.
இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்டுவர்ட் பின்னி 4 புள்ளி 4 ஓவர்கள் பந்துவீசி 4 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே தனிநபர் அதிகபட்சமாக இதுவரை இருந்தது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையையும் ஷமி தகர்த்தார்.
இதையும் படிங்க :"இந்தியாவின் உண்மையான ஹீரோ ரோகித் சர்மா தான்" - நாசர் ஹுசைன்!