ஹைதராபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர், உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் வீரர், 30 சதங்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்தான் சுனில் கவாஸ்கர்.
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சுனில் கவாஸ்கர், மும்பையில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். அவர் குறித்து பலரும் அறியாத சில சுவாரசிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
மருத்துவமனையில் மாற்றப்பட்ட கவாஸ்கர்
நாம் சிறுவயதில் சேட்டைகள் செய்யும்போதெல்லாம், 'உன்னை ஆஸ்பத்திரியிலே இருந்து மாத்தி தூக்கிட்டு வந்துட்டாங்க' என நமது உறவுக்காரர்கள் கேலியாக சொல்வதை கேட்டிருப்போம்.
இதுபோன்ற வேடிக்கையான நிகழ்வு கவாஸ்கருக்கு நிகழ்ந்திருக்கிறது. கவாஸ்கர் பிறந்த அன்று மருத்துவமனைக்கு வந்து பார்த்த அவரது மாமா, அடுத்த நாள் மருத்துவமனைக்கு வந்தபோது, கவாஸ்கருக்கு பதில் வேறு ஒரு குழந்தையை கொஞ்சக்கொடுத்துள்ளனர்.
முந்தைய தினம், கொஞ்சிய குழந்தையின் காதருகே இருந்த மச்சத்தைப் பார்த்து வைத்திருந்த அவர், இன்று தனது கையில் கொடுத்த குழந்தைக்கு காதருகே மச்சம் இல்லாதை கவனித்திருக்கிறார். பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் இதனைத் தெரிவித்து இது என் மருமகன் இல்லை என்றுள்ளார்.
பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம், பிறந்து இரண்டே நாளான கவாஸ்கரைத் தேடியது. அப்போது, பிரசவ வார்டில் மீனவப் பெண் அருகே கவாஸ்கர் வைக்கப்பட்டிருந்தார்.
இது செவிலியரின் தவறால் நிகழ்ந்திருக்கலாம். இந்தச் சம்பவத்தை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், அன்று தனது மாமா மட்டும் தன்னை அடையாளம் காணமால் இருந்திருந்தால், தான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கமாட்டேன், மாறாக மீனவராக ஆகியிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.