துபாய் :சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அரைஇறுதி சுற்றை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், பாகிஸ்தன் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளார்.
அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜை பின்னுக்குத் தள்ளி முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்து உள்ளார். கடைசி 6 ஆட்டங்களில் 219 ரன்கள் குவித்து உள்ள சுப்மான் கில், சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி, விராட் கோலி, ஆகியோரை தொடர்ந்து சர்வதேச பேட்ஸ்மேனகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த 4வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
கடைசி 8 ஆட்டங்களில் 282 ரன்கள் குவித்து உள்ள பாபர் அசாம், சுப்மன் கில்லை விட 6 தரவரிசை புள்ளிகள் சரிந்து இரண்டாவது இடத்திற்கு இறங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த பாபர் அசாம், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய அளவில் சோபிக்கத் தவறியதால் ஆட்டம் கண்டு உள்ளார்.
சுப்மான் கில்லை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி 4வது இடத்திலும், அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 6வது இடத்திலும் உள்ளனர். நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய வீரர்களில் அதிகபட்சமாக விராட் கோலி 8 ஆட்டங்களில் விளையாடி இரண்டு சதம், நான்கு அரைசதம் விளாசி 543 ரன்களுடன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக், விராட் கோலியை காட்டிலும் 1 புள்ளி அதிகம் கொண்டு பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மூன்றாவது இட்த்தில் உள்ளார். மற்றபடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 17 இடத்திலும், பாகிஸ்தான் பக்கர் ஷமான் 3 இடங்கள் முன்னேறி 11வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் 6 இடங்கள் ஏற்றம் கண்டு 12வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் முகமது சிராஜ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தார். மற்ற இந்திய வீரர்களில் குல்திப் யாதவ் 4வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 1 இடம் முன்னேறி 8வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
முகமது ஷமி ஒரு இடம் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார். நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 8 இடங்கள் முன்னேற்றம் 19வது இடத்தை பிடித்து உள்ளார். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களை பொறூத்தவரை ரவீந்திர ஜடேஜா 10வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க :New Zealand Vs Sri Lanka : வாழ்வா? சாவா? கடும் நெருக்கடியில் நியூசிலாந்து!