மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவ. 15) நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை எடுத்தது. விராட் கோலி (117ரன்), ஸரேயாஸ் ஐயர் (105 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தனர்.
398 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கம் ஆட்டம் கண்டாலும் கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தனர். சதம் விளாசிய டேரி மிட்செல் ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நியூசிலாந்து பக்கம் கொண்டு சென்றார்.
இந்த நேரத்தில் அபாரமாக செயல்பட்டு பந்துவீசிய முகமது ஷமி நியூசிலாந்து அணியின் முக்கிய 7 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து ஆட்டத்தை இந்திய அணி பக்கம் கொண்டு வந்து வெற்றி பெறச் செய்தார். 48 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.